உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தினமணில் வெளி வந்த எனது கட்டுரை
உலகின் மொழிகளின் முதன்மையாகவும்,தொன்மையானதாகவும், வளமையானதாகவும் விளங்கும் தமிழ் மொழிக்கு வளம்சேர்த்தவர்கள் இந்தி பாரினில் பலர்.சுமார் 6000த்தும் மேற்பட்ட மொழிகளுள் சீரிய இளமை பெற்ற மொழியாக உள்ள தமிழுக்கு இன்று செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சமயத்தில் இந்நிலை எய்திட உரமிட்ட கிறித்துவர்களின் தமிழ்பணி போற்றத்தக்க வகையில் நினைவு கூறுதல் நன்றிக் கடப்பாடுடையதாகும்.
தமிழில் முதல் இலக்கணம் அகத்தியம் என்றாலும் அது பெரும்பான்மையாக கிடைக்கவில்லை எனினும் அகத்தியரின் முதன்மைச் சீடராக இருந்த தொல்காப்பியர் வடித்த தொல்காப்பியம்தான் இன்று தமிழ் தொன்மையானது என்பதற்கு அடையாளத்தை பதிவு செய்கிறது.இதனடிப்படையிலேயே தமிழ் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனப்படுகிறது.ஒரு செடி மரமாக உருவாக வேண்டுமானால் அதை துவக்கத்திலிருந்தே முறையாக பண்படுத்தி பராமரிக்கவேண்டும்.அதுபோல் துவக்க காலத்தில் தமிழை பண்படுத்தி பரவச் செய்த பெருமை கிறித்துவர்களை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறித்துவர்கள் தம் சமயத்தை பரப்புவதற்காகத் தான் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்.அது அவர்களின் சுயநலமென்றாலும் வந்தவர்கள் சமயத்தை பரப்ப ஆங்கிலத்தைவிட அந்த்ந்த பிராந்திய மொழிகளே உதவுபவை என்பதை உணர்ந்து அதனைக் கற்றுக் கொண்டதோடு அதனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர்.அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தமிழைச் செம்மொழி என அறுதியிட்டு கூறிய கால்டுவெல்,ஜி.யு.போப்,வீரமாமுனிவர்,பவர் அய்யர் உள்ளிட்ட பல கிறித்துவ மத போதகர்கள் தமிழில் பல நூல்களை உருவாக்கி தமிழ் வளர பெரிதும் துணை புரிந்துள்ளனர்.
ஜெர்மனியிலிருந்து 1706 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடி வந்த சீகன் பால்க் என்ற ஜெர்மானிய கிறித்துவ மத போதகர் தான் முதன் முதலாக தமிழ் எழுத்துக்கள் அச்சேறுவதற்கு வித்திட்டவர்.1714 ஆம் ஆண்டு பைபிளை முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்து அச்சிட்டார்.தமிழில் நூல்கள் அச்சேற பல வகைகளில் உறுதுணை புரிந்தார்.தமிழகத்திற்கு வரவிருந்த ஜெர்மானிய போதகர்களுக்கு பயன்படும் வகையில் இலத்தீன் மொழியின் மூலம் தமிழைக் கற்க தமிழ் இலக்கண நூலை எழுதினார்.இவர் காலத்தில் தமிழில் புள்ளி எழுத்துக்கள் இல்லை.இருப்பினும் இவர் அச்சிட்ட தமிழ் நூல்கள் தமிழை நெறிப்படுத்துவதற்கு தூண்டுகோலாக இருந்தன.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகுந்த உறுதுணை புரிந்தவர் தோம்பாவணி என காவியத்தை இயற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர்.பெசுகிப் பாதிரியார் என்றழைக்கப்பட்ட இவர் 1710 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார்.முதலில் தைரியநாதன் என்று பெயர் வைத்துக் கொண்ட இவர் அது வடமொழி என்பதால் வீரமாமுனிவர் என செந்தமிழில் தமது பெயரை மாற்றிக் கொண்டார்.அசைவ உணவுகளைத் தவிர்த்த இவர் தமிழ் துறவியைப் போலவே அன்றாட வாழ்க்கை முறையை மேற்கொண்டார்.இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தார்.சதுராகராதியை இயற்றினார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்து தொன்னூல் விளக்கம் என்ற நூலாக வெளியிட்டார்.தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க விரும்பிய இவர் கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதினார்.இந்த நூல் கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்று எனலாம்.திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீனில் மொழி பெயர்த்தார்.மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆன தேம்பாவணி தான் இவர் எழுதிய நூல்களில் முதன்மையானது.தமிழில் முதன்முதலால பரமாரத்த குருவின் கதை என்ற நகைச்சுவை இலக்கியத்தை உருவாக்கினார்.மேலும் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை என்ற உரை நூல்களையும் எழுதினார்.
தமிழுக்கு சிறப்பு செய்த மதபோதகர்களில் மற்றொருவர் ஹென்றி பவர் ஐயர்.தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், கன்னடம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர்.சமணப் புலவர் சாஸ்திரம் ஐயரிடம் தமிழைக் கற்றார்.இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் பைபிள் நூல் இவரின் மொழி பெய்ர்ப்பு ஆகும். பகவத்கீதையையும், நன்னூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.வேதாகம மொழி பெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் தமிழை வளக்கும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் ஊழியம் செய்வதையே பெரிதும் விரும்பினார்.1868ஆம் ஆண்டு சீவகசிந்தாமணி என்னும் பெயர் பெற்ற காப்பியத்தின் முதல் இலம்பகமாகிய நாமகள் இலம்பகத்தை மட்டும், நச்சினார்கினியர் உரையுடனும், ஆங்கில முன்னுரை, குறிப்புகள், சாஸ்திரம் ஐயர் எழுதிய சமண சமய சித்தாந்தம் பற்றிய கட்டுரையின் ஆங்கில ஆக்கம், காவியச் சுருக்கம் ஆகியவற்றுடன் ஒரு நூலை ஆக்கினார்.1870ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.இவர் திருக்குறள்,நன்னூல் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும் விட்டுச் சென்றிருப்பது அவரின் அரிய நூல்களாகும்.
அதற்கு பின் வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திராவிட மொழியின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல்.தமிழ் செவ்வியல் மொழி என்று அறுதியிட்டு கூறியவர்.1838 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் ஒப்பியல் மொழி ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டார்.திராவிட மொழிகளின் தனித்துவத்தை எடுத்துக் காட்டியதில் முதனிலை பெற்றவர்.சமயப் பரப்பிற்காக வந்தாலும் அதர்கு உறுதுணையாக இருக்கப்போவது தமிழ்மொழியே என்பதை உணர்ந்து தமிழை முறைப்படி கற்றார்.இடையன்குடியில் தங்கி சுமார் 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மிகுந்த பெருமை சேர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினமானவை என உலகம் ஒப்ப விளக்கினார்.அதனை உறுதிப்படுத்த சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்ததோடு, அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும்,மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள். ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் தேடிக்கண்டறிந்தார்.இதன் தொடர்ச்சியாக இவர் எழுதிய திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு என்ற நூல் தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகியவற்றின் மூலங்களின் அடிப்படை.யில் எழுதப்பட்ட நூல்களுள் முதன்மையானது எனலாம்.இவர் நற்கருணை தியான மாலை,தாமரைத் தடாகம் பென்றவற்றையும் தமிழில் எழுதினார்.
தத்துவ போதக சுவாமிகள் (1577 - 1656) என்று அழைக்கப்பட்ட இராபர்ட் தெ நோபிலி.1606-ஆம் ஆண்டில் மதுரைக்கு வந்து தமிழ்துறவி போலவே வாழ்நதவர்.வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை பற்றி அறிவதற்காக தமிழ்,வடமொழி, தெலுங்கு மொழிகளைக் கற்றார்.நாற்பது உரைநடை நூல்களையும், மூன்று கவிதை நூல்களையும் தமிழில் இயற்றினார். இவற்றில் நீதிச்சொல், தேவமாதா சரித்திரம், ஞானோபதேசக் குறிப்பிடம், புனர்ஜென்ம ஆக்ஷேபம், தூஷண திக்காரம்,ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, கடவுள் நிர்ணயம், அர்ச். ஞானோபதேசம் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
போர்ச்சுகல்லிலிருந்து 16 ஆம் நூறாண்டில் தமிழகத்திற்கு வந்த என்றீக்சு என்பவர் முதன்முதலாக 1554ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கிறித்தவப் பாடல்களை நூலாக அச்சிட்டார்.அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்தவரான கோன்சால்வசு என்ற ஊழியரின் உதவினால் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்கினார்.செக் நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் கமில் சுவெலபிலும் ஒருவர். தமிழ், தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.செக்கோசுலவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்க்கடவுளான முருகனிடத்து மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் முருகன் பற்றி எழுதிய ஆங்கில நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முருகபெருமான் குறித்த அனைத்துச் செய்திகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவை. தமிழ் யாப்புப் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர்தம் யாப்பு குறித்த பல நூல்களை முனைவர் பொற்கோ அவர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழ்-ஜப்பானிய மொழி உறவு குறித்த நல்ல கருத்துடையவராயிருந்தார்.திராவிட மொழியியல், சங்க இலக்கியம் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
1847 ஆம் ஆண்டு யாழ்ப்பணத்திற்கு வந்த அமெரிக்க மத போதகரான டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் தமிழருக்கான மருத்துவ ஊழியர் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டவர்.தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைச் செய்தார்.தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர் எனக் குறிப்பிடச் செய்தவர். இவர் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார்.
ஜப்பானிலுள்ள டோக்கியோவில் பிறந்த ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளரான சுசுமு ஓனோவும், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தமிழ் அறிஞரான வித்தாலி பூர்னிக்காவும்,அமெரிக்காவைச் சேர்ந்த மதபோதகரான வின்சுலோவும் தமிழ் வளர்ரச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.சுசுமு ஓனோ பழங்கால ஜப்பானிய,தமிழ் மொழிகளை ஆராய்ந்து அதன் ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர்.பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் ஆகியோரின் தூண்டுதலால் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராய்ந்தார்.ஜப்பானிய மொழியில் திராவிட மொழிகளின் தாக்கம் நிறைந்து கிடப்பதை அறிந்த இவர் முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்று 1970களில் தமிழ்,ஜப்பானிய மொழிகளுக்கிடையிலான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். இது இவ்விரு மொழிகளுக்கிடையில் ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்தியது. வித்தாலி பூர்னிக்கா தாம் இறக்கும் வரை தமிழைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழியியல் அறிஞர் முனைவர் மு.வரதராசனாரிடம் தமிழ் கற்று தமிழப் பித்தன் என்ற புனைப் பெயரும் தனக்கு சூட்டிக் கொண்டார்.தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள், போன்றவற்றை ஆராய்ந்து ருஷ்ய மொழியில் அரிய நூல் ஒன்றையும் உருவாக்கினார்.வின்சுலோ 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்ட தமிழ் ஆங்கில விரிவான அகராதியை ஜோசப் நைட் பிரபுவின் மூல நகலை அடிப்படையாக வைத்து இருபது ஆண்டுகள் உருவாக்கி தமிழுக்கு அரும்பணியாற்றினார்.மேற்கத்திய தமிழறிரான கரொல்ட் ஃப் சிஃப்மன் தமிழியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் செயலாற்றி தமிழக் கல்விக்கு உதவும் பல நூல்களை எழுதியுள்ளார்.இவர் பேச்சுத் தமிழ் பற்றிய இலக்கண நூல் ஒன்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
தற்போது நடந்து வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜோர்ஜ் எல். ஹார்ட் தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் முக்கியமானவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 இல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்று இவர் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை துவங்க காரணகர்த்தாவாக இருந்தவர். இவருக்கு இலத்தீன், கிரேக்கம், ருஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் மிகுந்த புலமை உண்டு.பல பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.
இந்த அறிஞர்கள் தாங்கள் எழுதிய நூல்களின் வாயிலாக தமிழின் வளர்ச்சிக்கு மிகுந்த கொண்டாற்றியுள்ள்னர். சீகன்பால்கு காலத்தில் தமிழின் எழுத்துகள் வேறுவகையில் இருந்துள்ளன.அதற்குப் பின் வந்த அறிஞர்களின் பண்பட்ட முயற்சிகளில் பல நூற்றாண்டு காலத்தில் இது பன்முகத் தன்மையோடு பல்வேறு மாறுபாடுகளோடு வளர்ச்சி பெற்றுள்ளது.இது செம்மொழியாக உருவாக மேற்கண்டோரின் பணியும் போற்றத்தக்கது.உலக மொழிகளின் சாத்திரங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றான் மகாகவி பாரதி.தங்கள் சமயத்தை பரப்ப வந்த மதபோதகர்கள் தமிழ் நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.ஆதனால் தான் தமிழின் அருமை மற்ற நாட்டினருக்கும் தெரியவந்தது.உலகப் பொதுமறையாக திருக்குறளையும் ஏற்றுக்கு கொள்ள வைத்தது.தமிழிலும், தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர்கள் எழுதிய நூல்கள் தான் இன்றும் நம்மோடு இவர்களை நினைவில் கொண்டு பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.இந்த அருமையான நேரத்தில் இவர்களின் தமிழ்பபணிகளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாகும்.
உங்களின் தமிழார்வத்திற்குப் பாராட்டுகள். எனினும் நற்றமிழறிஞர்கள் அகத்தியரையும் அகத்தியத்தையும் கற்பனை என்று சொல்லும் பொழுது நீங்கள் எவ்வாறு எனக் குறிப்பிடுகிறீர்கள்? உங்களின் கட்டுரை தமிழாய்ந்தவரின் கட்டுரைபோல் இல்லாமல் தமிழைப்பற்றி மேம்போக்காகக் கேட்டறிந்தவர் எழுதி உள்ளது போல் இருக்கிறது. மிகுதியாகப் படித்துச் சிறப்பாக எழுத வேண்டுகின்றேன்.
பதிலளிநீக்குஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
அகத்தியரையும் அகத்தியத்தையும் கற்பனை என்று அவர் எங்கும் கூறியதாக தெரியவில்லையே?
பதிலளிநீக்குthis is a short chronological history of missionary's contribution to tamil literature.
பதிலளிநீக்கு